உடையாள்- 1
1.ஒரு துளி அந்தக்குழந்தைக்கு பெயரே இல்லை. ஏனென்றால் அந்தக்குழந்தைக்கு அப்பா அம்மா இல்லை. அது பிறந்தது வான்வெளியில் ஒரு கோளில். அந்தக்கோள் விண்வெளியில் மிகமிகத் தொலைவில் இருந்தது. மிகமிகத் தனிமையான கோள் அது. அதைச்சுற்றி இருண்ட வானம்தான் இருந்தது. பல கோடி கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரே இருட்டு. கன்னங்கரிய மை போன்ற இருட்டு நிறைந்த வெற்றிடம். வானத்தில் சில விண்கற்கள் மட்டும் சுற்றிக்கொண்டிருந்தன. அவை சூரிய வெளிச்சத்தில் தீப்பொறிகள் போல வானத்தில் ஒளிவிட்டுக்கொண்டு பறந்துசென்றன. சிலசமயம் சில விண்கற்கள் வீசியெறியப்பட்ட பந்தங்கள் போல எரிந்து கொண்டே சென்றன. அந்தக் கோளுக்கு உரிய சூரியன் மஞ்சள்குள்ளன் என்று அழைக்கப்பட்டது. விண்வெளியில் இருக்கும் பல்லாயிரம் கோடி நட்சத்திரங்களில் அதுவும் ஒன்று. ஆனால் மிகச்சிறியது. பிற நட்சத்திரங்களில் இருந்து விலகி மிகமிகத் தொலைவில் இருந்தது. மஞ்சள்குள்ளன் என்ற சூரியனுக்கு ஒரே ஒரு கோள்தான். அது ஒருமுறை அந்தச் சூரியனைச் சுற்றிவர இருநூறாண்டுகள் ஆகும். மஞ்சள் குள்ளனில் இருந்து அவ்வளவு தொலைவிலிருந்தது அந்தக்கோள். அந்தக்கோள் தன்னைத்தானே சுற்றிவந்ததால் அங்கே இரவும் பகல...