உடையாள்- 1
அந்தக்குழந்தைக்கு பெயரே இல்லை. ஏனென்றால் அந்தக்குழந்தைக்கு அப்பா அம்மா இல்லை. அது பிறந்தது வான்வெளியில் ஒரு கோளில்.
அந்தக்கோள் விண்வெளியில் மிகமிகத் தொலைவில் இருந்தது. மிகமிகத் தனிமையான கோள் அது. அதைச்சுற்றி இருண்ட வானம்தான் இருந்தது. பல கோடி கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரே இருட்டு. கன்னங்கரிய மை போன்ற இருட்டு நிறைந்த வெற்றிடம்.
வானத்தில் சில விண்கற்கள் மட்டும் சுற்றிக்கொண்டிருந்தன. அவை சூரிய வெளிச்சத்தில் தீப்பொறிகள் போல வானத்தில் ஒளிவிட்டுக்கொண்டு பறந்துசென்றன. சிலசமயம் சில விண்கற்கள் வீசியெறியப்பட்ட பந்தங்கள் போல எரிந்து கொண்டே சென்றன.
அந்தக் கோளுக்கு உரிய சூரியன் மஞ்சள்குள்ளன் என்று அழைக்கப்பட்டது. விண்வெளியில் இருக்கும் பல்லாயிரம் கோடி நட்சத்திரங்களில் அதுவும் ஒன்று. ஆனால் மிகச்சிறியது. பிற நட்சத்திரங்களில் இருந்து விலகி மிகமிகத் தொலைவில் இருந்தது.
மஞ்சள்குள்ளன் என்ற சூரியனுக்கு ஒரே ஒரு கோள்தான். அது ஒருமுறை அந்தச் சூரியனைச் சுற்றிவர இருநூறாண்டுகள் ஆகும். மஞ்சள் குள்ளனில் இருந்து அவ்வளவு தொலைவிலிருந்தது அந்தக்கோள். அந்தக்கோள் தன்னைத்தானே சுற்றிவந்ததால் அங்கே இரவும் பகலும் இருந்தன.
அந்தக்கோளில் செடிகளோ மரங்களோ இல்லை. ஆகவே உயிரினங்கள் இல்லை. ஆனால் சிலவகையான பாக்டீரியாக்களும் அமீபாக்களும் இருந்தன.
கோளின் தரையில் மென்மையான புழுதிமண் அலையலையாகப் படிந்திருந்தது. மஞ்சள் நிறமான கடல் ஒன்று அப்படியே அலைகளுடன் உறைந்ததுபோல தோன்றியது. அதில் உயரமான மஞ்சள்நிறப் பாறைகள் அடுக்கடுக்காக நின்றன.
அந்தப் பாறைகளில் கந்தகம் மிகுதி. ஆகவே அவை பொன்மஞ்சள் நிறமானவை. பாறைகள் காற்றில் உடைந்து உருவானது அங்கிருந்த புழுதி. அதுவும் மஞ்சள்நிறமானது.
கோளில் வாயுமண்டலம் உண்டு. எல்லா வாயுக்களும் இருந்தாலும் நைட்ரஜன்தான் மிகுதி. நைட்ரஜன் கந்தகத்துடன் வேதிவினை புரிந்து பலவகையான சல்ஃபர் நைட்ரைட்டுகளை உண்டுபண்ணியிருந்தது. அவை அந்நிலம் முழுக்க பரவியிருந்தன.
அந்தக்கோளின் மேல் ஒரு மிகப்பெரிய கண்ணாடிக்குமிழி இருந்தது. மிகமிகப் பெரியது அது. நீர்க்குமிழி போல அரைக்கோள வடிவமானது. அந்தக் குமிழிக்குள் ஒரு பெரிய நகரம் அளவுக்கே இடமிருந்தது.
அதன் கீழே சுரங்க அறைக்குள் ஆக்ஸிஜனை உருவாக்கும் பெரிய இயந்திரம் இருந்தது. நைட்ரஜனையும் ஹைட்ரஜனையும் உருவாக்கும் இயந்திரங்களும் இருந்தன. இயந்திரங்கள் வெளியே இருந்த காற்றில் இருந்து ஆக்ஸிஜனை உறிஞ்சி அந்த குமிழிக்குள் நிறைத்தன
ஆக்சிஜனையும் ஹைட்ரஜனையும் இணைத்து தண்ணீரையும் இயந்திரங்கள் உருவாக்கின. அங்கே கார்பன்டையாக்சைடும் உருவானது. தண்ணீரும் ஆக்சிஜனும் கார்பன்டையாக்ஸைடும் இருந்தமையால் அங்கே தாவரங்கள் முளைத்து வளர்ந்தன.
அந்த இயந்திரங்கள் சூரியஒளியைக் கொண்டும் அணுஆற்றலைக் கொண்டும் இயங்குபவை. ஆகவே அவை முடிவில்லாக் காலம் வரை செயல்பட்டுக் கொண்டிருக்கும். அவை செயல்படத்தொடங்கி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியிருந்தன.
அந்தக் குமிழிக்குள் ஒரு காடு உருவாகியிருந்தது. பெரிய மரங்களும் செடிகளும் புல்பூண்டுகளும் நிறைந்த காடு அது. அந்தக்காட்டில் புழுக்களும் பூச்சிகளும் பெருகின. அவற்றை உண்ணும் பறவைகளும் நிறைய இருந்தன.
அந்த செடிகளும் மரங்களும் எல்லாம் அங்கே கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டவை. சிறந்த காய்களையும் கனிகளையும் மட்டும் அளிக்கும் தாவரங்கள் தேர்வு செய்து கொண்டு வரப்பட்டிருந்தன. ஏராளமான காய்களும் கனிகளும் தானியங்களும் அங்கே விளைந்திருந்தன.
ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் இருந்து சென்ற மனிதர்களால் அமைக்கப்பட்டது அந்தக் கண்ணாடிக்குமிழி. வைரக்கண்ணாடி என்ற பொருளால் ஆனது அது. நான்கு அடி தடிமன் கொண்டது. ஆனால் மிகத்துல்லியமானது. எனவே பார்வைக்கு நீர்க்குமிழி போல மிக மெல்லியதாகத் தோன்றியது.
கரிப்பொருட்கள் மிகமிக உயர்ந்த அழுத்ததில் வைரமாகின்றன. மிகஉயர்ந்த திணிவு உள்ள கரிப்பொருளை மிகமிகமிக உயர்ந்த அழுத்ததில் வைரத்தகடாக ஆக்கினார்கள். அதைக் கொண்டு உருவாக்கப்பட்ட கண்ணாடி அது. எத்தனை எடைவந்து அறைந்தாலும் அது உடையாது.
நெடுங்காலம் முன்பே மனிதர்கள் பூமியில் இருந்து ராக்கெட்டுகளில் கிளம்பி விண்வெளியில் பயணம் செய்ய ஆரம்பித்திருந்தனர். அவர்கள் முதலில் தங்கள் சூரியனைச் சுற்றியிருந்த கோள்களுக்குச் சென்றனர். அங்கே தங்களுக்கான உறைவிடங்களை உருவாக்கிக் கொண்டனர். அதன்பின் சூரியமண்டலத்திற்கு வெளியே உள்ள கோள்களை தேடிச் சென்றனர்.
ஆனால் மனிதர்களின் சூரியமண்டலத்திற்கு வெளியே இருந்த விண்மீன்கள் எல்லாம் பலமடங்கு எரியாற்றல் கொண்டவை. அவற்றின் கோள்கள் எல்லாமே கடுமையான வெப்பத்துடன் இருந்தன. சிலகோள்கள் உருகிய கல்குழம்பாகவே இருந்தன. சில கோள்கள் வாயு வடிவில் இருந்தன. அவற்றை நெருங்கவே முடியாது.
குளிர்ந்த கோள்களை நாடி மனிதர்கள் விண்வெளியில் அலைந்தனர். அப்படித்தான் மஞ்சள்குள்ளன் என்ற நட்சத்திரத்தை கண்டனர். அது வெப்பம் குறைவான சிறிய நட்சத்திரம். அதைச்சுற்றி சுழன்று கொண்டிருந்த கோள் மிகவும் தொலைவில் இருந்தது. ஆகவே அங்கே வெப்பம் மிகக்குறைவு. அங்கே மனிதர்கள் சென்று இறங்க முடியும்.
பூமியிலிருந்து முதல் விண்கலம் ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அங்கே வந்து இறங்கியது. அவர்கள் அங்கே உள்ள சூழலை ஆராய்ந்தார்கள். அதன்பிறகு அங்கே அந்த பெரிய கண்ணாடிக்குமிழியை உருவாக்கினார்கள். அதற்குள் தங்குமிடங்களை அமைத்தனர். ஆய்வுக்கூடங்களையும் கட்டினர்.
அங்கே சிலநூறாண்டுகள் மனிதர்கள் வாழ்ந்தனர். வெளியே இருந்து மண்ணை கொண்டுவந்து அதில் கந்தகத்தை நீக்கி அங்கே பரப்பினர். அதில் பூமியில் இருந்து கொண்டுவந்த செடிகளை நட்டார்கள். அவற்றை மரங்களாக வளர்த்தார்கள். அங்கே புழுக்கள், பூச்சிகள், பறவைகள் ஆகியவற்றை உருவாக்கினர். ஏற்கனவே அதேபோல பல கோள்களில் அவர்கள் செயற்கையான சிறிய உலகங்களை உருவாக்கியிருந்தனர்.
மனிதர்கள் அந்த கோளத்தை ஒர் இளைப்பாறல் நிலையமாகவே கருதினார்கள். அங்கே தங்கி இளைப்பாறிவிட்டு மேலே பயணம் செய்தார்கள். அந்த குமிழிக்கு அருகே விண்கலங்கள் இறங்கும் மலையுச்சி இருந்தது.
பிறகு அதைவிடச் சிறந்த கோள்கள் மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கே செல்வதற்கு சுருக்கமான பாதையும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே அந்தக்கோள் கைவிடப்பட்டது.
மனிதர்கள் அந்தக்கோளுக்கு தங்கத்துளி என்று பெயர் கொடுத்திருந்தனர். அந்தப்பெயரை அவர்கள் அனைவரும் மறந்துவிட்டனர்.
அந்தக் கண்ணாடிக்குமிழி மட்டும் அங்கேயே இருந்தது. அதன் இயந்திரங்கள் ஓடிக்கொண்டே இருந்தன. ஆகவே அங்கே ஒரு காடு தொடர்ந்து வளர்ந்தது.
அந்த குமிழிக்குள்ளேயே அந்தக்காடு தன்னை தகவமைத்துக் கொண்டது. அங்கிருந்த பறவைகளும் பூச்சிகளும் பாக்டீரியாக்களும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்ந்தன. அங்கே முழுமையான ஒர் இயற்கைச் சூழல் இருந்தது. பூமியிலிருந்தது போன்ற இயற்கையின் ஒரு சிறு துளி அது.
2. கரு
மனிதர்கள் பூமியிலிருந்து அந்தக் கோளுக்கு வந்த காலத்தில் எல்லா மனிதக் குழந்தைகளும் சோதனைக் குடுவைகளில்தான் பிறந்தன. பெண்களின் வயிற்றில் குழந்தை பிறக்கும் முறை மறைந்துவிட்டிருந்தது. அந்தமுறையில் சிறந்த குழந்தைகளை உருவாக்க முடிந்தது.
அந்த முறையில் ஆணின் உயிரணுவும் பெண்ணின் கருமுட்டையும் எடுக்கப்படும். அவை ஒரு சோதனைக்குழாயில் ஒன்றாக இணைக்கப்படும். அது ஒரு மனிதக்கருவாக ஆனதும் அதை எடுத்து ஒரு சிறிய குமிழிக்குள் வைப்பார்கள்.
அந்தக் குமிழி ஒரு நீர்த்துளி அளவே இருக்கும். பார்ப்பதற்குக் கண்ணாடியாலானது போல தோன்றும். ஆனால் அது உயிருள்ள புரோட்டீனால் ஆனது. அது செறிவுபடுத்தப்பட்ட புரோட்டீன். அதற்குள் ஒருதுளி புரோட்டீன் திரவம் இருக்கும். அந்த உயிர்த்திரவத்தில் மனிதக்கரு ஒரு மிகச்சிறிய புழுபோல மிதந்துகொண்டிருக்கும்.
அந்த குமிழியை மனிதவிதை என்று சொல்வார்கள். அப்படி கருவாக்கப்பட்ட மனிதவிதைகளை சேமித்து வைப்பார்கள். தேவையானபோது அந்த மனிதவிதையை பெரிய குடுவை ஒன்றுக்குள் போடுவார்கள். அந்தக் குடுவைதான் கருப்பை என்று சொல்லப்பட்டது
அந்தக்குடுவையும் செறிவுபடுத்தப்பட்ட புரோட்டீனால் ஆனது. அதற்குள் அந்தக் கரு வளர்வதற்குரிய திரவம் நிறைந்திருக்கும். அது தேன்போல கெட்டியானது. பெண்ணின் கருப்பைக்குள் இருக்கும் ரத்தம் போன்றது. அதில் எல்லா உயிர்ச்சத்துக்களும் உண்டு.
குடுவைக்குள் சென்றதுமே அந்தக் கரு தன்னை ஒரு நரம்புச் சரடால் குடுவையுடன் இணைத்துக்கொள்ளும். போதுமான வெப்பத்தில் சோதனைக் குடுவை இருக்கும். அந்த மென்மையான திரவத்தில் கரு வளர ஆரம்பிக்கும். அந்த நரம்புச்சரடு தொப்புள்கொடியாக ஆகும். அதன்வழியாக ஆக்சிஜனும் உணவும் குழந்தைக்கு கிடைக்கும்.
குழந்தை போதுமான அளவு வளர்ந்ததும் அதை சோதனைக் குடுவைக்குள் இருந்து வெளியே எடுப்பார்கள். அதை செயற்கைப் பால் கொடுத்து வளர்ப்பார்கள். அதையெல்லாமே இயந்திரங்களே செய்தன.
மனிதவிதையை தயாரிப்பதும் வளர்ப்பதும் எல்லாமே இயந்திரங்களால்தான் செய்யப்பட்டன. ஆகவே அந்தக் குழந்தைகளுக்கு அம்மா எனறு யாரும் இல்லை. அப்பாவும் இல்லை. இயந்திரங்கள்தான் குழந்தைகளை வளர்த்தன. அத்தனை மனிதர்களும் சேர்ந்து குழந்தை களை பார்த்துக்கொண்டார்கள்.
விண்வெளியில் மனிதர்கள் பல ஆண்டுகள் பயணம் செய்யவேண்டியிருந்தது. அன்று மனிதர்கள் இருநூறாண்டுகள் வரை வாழ்ந்தனர். ஆனால் விண்வெளிப் பயணம் ஆயிரம் ஆண்டுகள்கூட நீடித்தது.
ஆகவே விண்கலத்திலேயே குழந்தைகளை உருவாக்கினார்கள். பயணம் செய்வார்களின் உயிரணுவிலும் கருவிலும் இருந்து குழந்தைகள் உருவாக்கப்பட்டன. அவை விண்கலத்திலேயே வளர்ந்தன.
அந்த விண்கலங்கள் மிகப்பெரியவை. அவை வைரக்கண்ணாடியாலானவை. அணுவிசையால் இயங்குபவை நூற்றுக்கணக்கான அறைகள் கொண்டவை. மைதானங்கள், நீச்சல்குளம், பூந்தோட்டம் ஆகியவை அதற்குள் இருந்தன. சில விண்கலங்களுக்குள் சிறிய காடே இருந்தது.
ஆகவே அதற்குள் பிறந்த குழந்தைகள் அங்கெயே வளர்ந்தன. முழு வாழ்நாளையும் அதற்குள் செலவிட்டன. அக்குழந்தைகள் வளர்ந்ததும் அவர்களிடம் விண்கலத்தை ஒப்படைத்துவிட்டு முதியவர்கள் உயிரிழந்தார்கள். அந்தக் குழந்தைகள் வளர்ந்தபின் அவர்களின் குழந்தைகள் உருவாகின.
விண்வெளிப் பயணத்திற்குக் கிளம்புபவர்களின் ஐந்தாவது தலைமுறையினர்தான் இலக்கைச் சென்று சேரமுடிந்தது. ஒரு தலைமுறை அறிந்த அனைத்தையும் கணிணிகளில் பதிவுசெய்து வைத்திருந்தனர். அவற்றை அடுத்த தலைமுறை கற்றுக்கொண்டது.
ஒரே மனிதர் பழைய சட்டையை அகற்றி புதிய சட்டையை போடுவதுபோல தன் உடல்களை மாற்றிக்கொள்ள முடிந்தது. ஒரு மனிதரின் மூளையில் உள்ள செய்திகள்தான் அவருடைய மனம். அந்த மனம் அப்படியே இன்னொருவருக்கு அளிக்கப்பட்டது. ஆகவே உடல் அழிந்தாலும் மனம் அழிவதில்லை.
ஆணின் உயிரணுவும் பெண்ணின் கருமுட்டையும் இணைந்த மனிதவிதைகளை அவர்கள் இயந்திரங்களுக்குள் சேமித்து வைத்தனர். அந்த விதைகள் வளர்ந்து மனிதனாக உருவாக ஆரம்பிக்கும்போதே அதை அப்படியே குளிரச்செய்தனர். மேற்கொண்டு வளராது அந்தக்கரு அப்படியே உறைந்து இருக்கும்.
எத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும் அந்த கரு அப்படியே இருக்கும். எப்போது போதிய வெப்பம் கிடைக்கிறதோ உடனே உயிர்வந்து வளர ஆரம்பிக்கும். நன்றாக வளர்ந்து குழந்தையாக மாறிவிடும்.
அந்தக் கோளில் இருந்த மாபெரும் குமிழிக்குள் நிறைய குழந்தைகளின் கருக்கள் இருந்தன. அவையெல்லாம் விதையாக உறைய வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த மனிதர்கள் அவற்றை அங்கே பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
அந்த கோளில் மேலும் நிறைய கண்ணாடிக் குமிழிகளை உருவாக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர். அங்கே வாழ மனிதர்கள் வேண்டும். அதன்பொருட்டு நிறைய மனிதர்களை உருவாக்குவதற்காக அவற்றை பாதுகாத்து வைத்திருந்தனர்.
திடீரென்று ஒருநாள் மஞ்சள்குள்ளன் என்ற சூரியனில் இருந்து கடுமையான கதிரியக்க அலைகள் உருவாயின. வெளியே இருந்த நிலம் முழுக்க சிவப்பாக மாறியது. ஏராளமான பாறைகள் விரிசலிட்டு உடைந்தன.
அப்போது அந்த குமிழிக்குள் இருந்த மனிதர்கள் அதற்குமேல் அங்கே தங்கவேண்டாம் என்று முடிவுசெய்தார்கள். அவர்கள் தங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அவசரமாக கிளம்பிச் சென்றனர்.
அவர்கள் அனைவரும் விண்கலங்களில் ஏறிச் சென்றுவிட்டார்கள். ஒரே ஒரு கருவை மட்டும் அவர்கள் எடுக்க மறந்துவிட்டார்கள். அந்தக்கரு சோதனைக் குடுவைக்குள் குளிரில் உறைந்து இருந்தது. அந்த இயந்திரங்கள் ஓடிக்கொண்டிருந்ததனால் அந்தக்கருவும் அப்படியே இருந்தது.
மனிதர்கள் பிறகு அங்கே வரவே இல்லை. அவர்கள் அங்கே வரும் வழியையும் மறந்துவிட்டார்கள். முன்பு பலகோடி ஆண்டுகள் அந்தக் கோள் எந்த உயிரசைவும் இல்லாமல் இருந்தது. நடுவே சிலநூறு ஆண்டுகள் அங்கே மனிதர்கள் வாழ்ந்தனர். மீண்டும் அது பழையநிலைக்கே சென்றது.
அப்படியே ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்குமேல் காலம் சென்றது. ஒருநாள் மீண்டும் மஞ்சள்குள்ளன் என்ற சூரியனில் ஒர் அதிர்வு ஏற்பட்டது. அந்தக் கோளின் நிலத்தில் வெடிப்புகள் உருவாயின. அந்த அதிர்வில் இயந்திரங்கள் ஒருகணம் நின்று மீண்டும் ஓடின.
மனிதக்கரு இருந்த இயந்திரத்தில் ஏற்பட்ட அதிர்வால் அது சற்று பழுதடைந்தது. ஆகவே மீண்டும் குளிரை அளிக்கவில்லை. கரு வெப்பம் அடைய ஆரம்பித்தது.
வெப்பம் அடையும்போது அந்த மனிதவிதை இருந்த குமிழி அசைய ஆரம்பிக்கும். அது தானாகவே வந்து குடுவையில் இருந்த திரவத்தில் விழும். அவ்வாறு இயந்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
சோதனைக் குடுவைக்குள் இருந்த திரவத்தில் கரு வந்து விழுந்தது. ஒரு பட்டாணிக்கடலை அளவே இருந்தது அந்த புரோட்டீன் குமிழி. அது திரவத்தில் கரைந்து மறைந்தது. அதற்குள் இருந்த சிறிய கரு திரவத்தில் நீந்தியது. அது தானாகவே வளர்ந்தது.
அந்தக் கரு ஒரு பெண் குழந்தையாக ஆகியது. அந்தக்குழந்தைக்கு நன்றாக கைகளும் கால்களும் வளரும்வரை அது உள்ளேயே இருந்தது. பிறகு அந்தக்குழந்தை குடுவைக்குள் இருந்து தவழ்ந்து வெளியே சென்றது.
அங்கே குழந்தையை வளர்க்கும் இயந்திரங்கள் இருந்தன. அவை அப்போதும் ஓடிக்கொண்டிருந்தன. குழந்தை தானாகவே தவழ்ந்து சென்று அதை வளர்க்கும் இயந்திரத்தை அடைந்தது.
அந்த இயந்திரத்தில் பால்குடிப்பதற்கான சிறிய காம்புகள் இருந்தன. அங்கே ஒரு குழந்தை வந்தால் அவை உடனே அடையாளம் கண்டுகொண்டு பால்சுரக்க தொடங்கும். குழந்தை அந்தப்பாலை குடித்தது
அக்குழந்தை இயந்திரத்திற்குள் வளர்ந்தது. இயந்திரத்தின் உட்பகுதி மென்மையான புரோட்டீனால் ஆனது. மனிதத் தசைபோன்றே அது இளஞ்சூடாக இருக்கும். அம்மாவின் அடிவயிற்றில் ஒட்டியிருப்பது போலவே தோன்றும்
அந்தக் குழந்தை அங்கே தன்னந்தனிமையில் வளர்ந்தது. அது உண்பதற்கான உணவு அங்கே இருந்தது. அது ஒருவகை கெட்டியான பால். அதை குழாய் வழியாக அந்தக் குழந்தை குடித்தது.
குழந்தை நன்றாக வளர்ந்தது. பின்னர் தவழ ஆரம்பித்தது. அந்த மாபெரும் கண்ணாடி குமிழிக்குள் இருந்த காட்டில் அது வாழ்ந்தது. அப்படி ஓர் இடம் இருப்பது எவருக்குமே தெரியாது. அப்படி ஒரு குழந்தை இருப்பதும் எவருக்கும் தெரியாது.
அந்த கோளிலேயே எவரும் இல்லை. அந்தக்கோளைச் சுற்றி பலகோடி கிலோமீட்டர் தொலைவுக்கு எவருமே இல்லை. அதைச் சூழ்ந்திருந்த வான்வெளியில் இருட்டு நிறைந்திருந்தது. இருட்டில் விண்கற்கள் மின்மினிகள் போல எரிந்தபடிஅலைந்தன.
மஞ்சள்குள்ளன் சூரியன் ஒரு பெரிய பொன்னிற உருண்டையாக வானில் தெரிந்தது. காலையில் வானத்தின் தெற்குமூலையில் அது தெரிந்தது. இரவானபோது வடக்கு மூலையில் மறைந்தது.
எவருக்குமே தெரியாத அந்தக் குழந்தைக்கு பெயரே இல்லை. அது மட்டும் தன்னந்தனியாக அங்கே இருந்தது.
[மேலும்]
Comments
Post a Comment