உடையாள்-6
11. உயிர்க்கூட்டு
நாமி தன் கண்ணாடிக்
குமிழிக்குள் வந்ததும் கணிப்பொறியை நோக்கித்தான் ஓடினாள். அதன்முன் அமர்ந்தாள். அவள்
படபடப்பாக இருந்தாள். கணிப்பொறியில் குரு தோன்றி அவளை பார்த்துக்கொண்டிருந்தது.
குருவுக்கு எந்த
உருவமும் இல்லை. அதை எப்படி வேண்டுமென்றாலும் அமைத்துக்கொள்ளலாம். நாமி குருவுக்கு
முதலில் உருவம் கொடுக்கவில்லை. வெறும்குரலாகவே கேட்டுக்கொண்டிருந்தாள்.
அதன்பின் அவள்
அதற்கு ஓர் அறிவிலாளரின் முகத்தை அளித்தாள்.. முன்பு பூமியில் வாழ்ந்த அறிவியலாளரான
ஐன்ஸ்டீனின் முகம் அது.சிலநாட்கள் கழித்து அதற்கு அவள் ஒரு தத்துவ ஞானியின் முகத்தை
அளித்தாள். அது பூமியில் வாழ்ந்த ஷோப்பனோவர் என்ற அறிஞரின் முகம்
அதன்பின் அவள்
குருவுக்கு ஒரு கவிஞரின் முகத்தை அளித்தாள். பலவாறாகத் தேடி அவள் அந்த முகத்தை கண்டடைந்தாள்.அந்த
முகம் பூமியில் வாழ்ந்த கவிஞரான ஷேக்ஸ்பியருடையது
அதன்பின் அவள்
இந்த எல்லா இயல்புகளும் கலந்த ஒரு முகத்துக்காக தேடினாள். அந்த முகத்தின் ஓவியம்தான்
இருந்தது. அதை அவள் தேர்ந்தெடுத்தாள். அது தொன்மையான முனிவரான வியாசரின் முகம்.
குரு பொதுவாக வியாசரின்
முகம் கொண்டிருந்தது. தேவைப்படும்போது ஐன்ஸ்டீன், ஷோப்பனோவர், ஷேக்ஸ்பியர் என வெவ்வேறு
வடிவங்களை எடுத்தது.
நாமி அந்த சிற்றுயிரை
ஆய்வுக்கருவிகளில் வைத்தாள்.அந்த சிற்றுயிர் அவள் அங்கே வைத்ததும் சிறிய பேன் போல உருவம்
கொண்டு நகர்ந்தது. அதை ஊசியால் தொட்டதும் உடைந்து கண்ணுக்குத்தெரியாத மிகச்சிறிய நுண்ணுயிர்களாக
மாறியது
ஆய்வுக்கூடத்தில்
இருந்த இயந்திரங்கள் வெவ்வேறு கதிர்கள் வழியாக அதை ஆய்வு செய்தன.முதலில் அதை பல ஆயிரம்
மடங்கு பெரிதாகக் காட்டின. கணிப்பொறி திரையில் நாமி அதைப் பார்த்தாள்
அந்தச் சிற்றுயிர்
ஒற்றை உடலாக இருந்தாலும் ஒன்று அல்ல. அது பல அமீபாக்கள் ஒன்றையொன்று கவ்விக்கொண்டு
ஒரே உடலாக இருந்தது. தொட்டதும் தனித்தனியாக பிரிந்தது.
ஒவ்வொரு அமீபாவும்
ஒரு சிறுவட்டம் போலிருந்தது. அந்த வட்டத்தின் விளிம்புகள் அலையடித்தன. தனியாக ஆனதும்
அது அருகே இருக்கும் அமீபாவை நோக்கிச் சென்றது. இன்னொரு அமீபாவுடன் அது இணைந்துகொண்டது. பல அமீபாக்கள் இணைந்து
மீண்டும் ஒரே உடலாக ஆயின.
அவ்வாறு உணைந்து
இணைந்து இணைந்து ஒரே உடல்போல மாறியது. அந்த பெரிய உடல் அங்குமிங்கும் அலைந்தது. அப்போது
அதைப்பார்க்க ஒரே உடலாகவே தோன்றியது.
“இவை இங்கே முன்பிருந்த
அமீபாக்கள்தான்” என்று குரு சொன்னது. “இங்கே முன்பே அமீபாக்களும் பாக்டீரியாக்களும்
இருந்தன. இங்கே இருந்த மிகக்குறைவான ஆக்ஸிஜனை சுவாசிக்கும் தன்மைகொண்டவை அவை” என்று
குரு சொன்னது’
“அவை முன்பு இப்படி
இவ்வாறு இணைந்தனவா?” என்று நாமி கேட்டாள்
“இல்லை. முன்பு
அவற்றுக்கு இந்த இயல்பு இல்லை”என்று குரு சொன்னது
“ஏன் அவ்வாறு அவை
மாறின?”என்று நாமி கேட்டாள்.
“அது எனக்குத்
தெரியாது. இந்தக் கணிப்பொறியில் அந்த அறிதல் சேமிக்கப்படவில்லை”என்று குரு சொன்னது
“ஏன்?” என்று நாமி
கேட்டாள்
“பூமியில் வாழ்ந்த
மனிதர்கள் அறிந்த செய்திகளே இதில் உள்ளன” என்று குரு சொன்னது
“சரி, இதற்குள்
இருக்கும் அறிதல்களை பலவகையாக தொகுத்துக் காட்டு. எப்படியெல்லாம் இது நிகழ்ந்திருக்கலாம்
என்று நானே பார்க்கிறேன்”என்று நாமி சொன்னாள்
குரு முதலில் அதிலிருந்த
அறிதல்களை நூறு வகையாக தொகுத்து காட்டியது. அதில் பத்து வாய்ப்புகளை நாமி தேர்வுசெய்தாள்.
அவற்றை அவள் ஆராய்ந்தாள். அதில் ஒன்று சரியாக இருக்கக்கூடும் என்று அவள் முடிவுசெய்தாள்
அங்கே ஒன்றரைலட்சம்
ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கதிரியக்கம் நடந்தது. அங்கிருந்த மனிதர்கள் அந்தக்கோளை கைவிட்டுச்
செல்ல அதுவே காரணம். அந்தக் கதிரியக்கத்தின்போது அங்கிருந்த நுண்ணுயிர்களில் மரபணுமாற்றம்
நடந்திருக்கலாம்
அந்த மாற்றம் தொடர்ச்சியாக
நிகழ்ந்தபோது அவை உருமாற்றம் அடைந்திருக்கலாம். அவ்வாறு உருவானது அந்த சிற்றுயிர்.
அதைச் சிற்றுயிர் என்பதைவிட கூட்டுயிர் என்பதே சரியானது.
“இப்படி நுண்ணுயிர்கள்
சேர்ந்து கூட்டுயிராக ஆகும் வழக்கம் உண்டா? என்று நாமி கேட்டாள்
“உயிர்கள் உருவான
தொடக்க காலகட்டத்தில் பூமியில்கூட இவ்வாறு நிகழ்ந்திருக்கலாம். அங்கு வாழ்ந்த ஆய்வாளர்
சிலர் அப்படி நினைதார்கள். பூமியில் கடல்களில் வாழ்ந்த ஒருசெல் உயிர்கள் பல ஒன்றாகச்
சேர்ந்து கூட்டுயிராக மாறியிருக்கலாம்” என்று குரு சொன்னது.
நாமி “ஆமாம்.அவ்வாறு
நிகழ்ந்திருக்கவே வாய்ப்பு” என்றாள்
“அவ்வாறு கூடி
உருவான நுண்ணுயிர்கள் காலப்போக்கில் பிரியமுடியாதபடி இணைந்திருக்கலாம். அவ்வாறு பெரிய
உயிர்கள் உருவாகியிருக்கலாம். அவை பலவகையாக மாறி பெரிய விலங்குகளாக மாறியிருக்கலாம்”
என்று குரு சொன்னது
நாமி “அப்படி ஊகிக்க்க என்ன அடிப்படை?”என்று கேட்டாள்.
“ஏனென்றால் உயிர்களின்
உடல்களிலுள்ள செல்கள் என்பவை ஒவ்வொன்றும் தனித்தனி உயிர்கள். அவை ஒன்றாகச் சேர்ந்து
ஒரே உடலாகவே இருந்தாலும் தனித்தனியாகவே வாழ்கின்றன. ஒவ்வொன்றின் பிறப்பும் வளர்ச்சியும்
சாவும் தனித்தனியானது” என்றது குரு
“என் உடலிலும்
கோடிக்கணக்கான செல்கள் உள்ளன”என்றாள் நாமி
“உன்னுடைய மனித
உடலேகூட பலகோடி செல்கள் சேர்ந்து வாழும் ஓரு கூட்டமைப்புதான்” என்று குரு சொன்னது.
“பூமியில் முன்பு
நடந்த அந்தச் செயல்பாடுதான் இங்கே தொடங்கியிருக்கிறதா?”என்று நாமி கேட்டாள்
“அப்படி இருக்கலாம்.
இந்த நுண்ணுயிர்கள் இன்னும் பிரிக்கமுடியாதபடி இணைந்து ஒரே உடலாக ஆகவில்லை. நுண்ணுயிர்களின்
குவியல்களாகவே உள்ளன. ஆகவே இவை இணைந்தும் பிரிந்தும் செயல்படுகின்றன” என்று குரு சொன்னது.
“இவை ஏன் இணைந்தன?இந்த
மாற்றம் நிகழ்வதற்கு ஏதோ வெளிக்காரணம் இருக்கவேண்டும்”என்று நாமி சொன்னாள்
“ஆமாம் இப்படி
நுண்ணுயிர்கள் இணைந்து செயல்படவேண்டும் என்றால் அதற்கான தேவை வந்திருக்கவேண்டும். அதற்கான
புதிய வாய்ப்பும் உருவாகியிருக்கவேண்டும்” என்று குரு சொன்னது
நாமி மீண்டும்
ஆராய்ந்தாள். அப்போது கணிப்பொறியின் ஆய்வுக்கருவி ஒரு தகவலைக் காட்டியது. அந்த கூட்டுயிர்
ஆக்ஸிஜனை சுவாசிக்கிறது.
தங்கத்துளி கோளில்
உள்ள காற்றுமண்டலத்தில் ஆக்ஸிஜன் மிகமிகக் குறைவு. அதை சுவாசித்து வாழும் இயல்புடன்தான்
அங்கிருக்கும் பாக்டீரியாக்களும் அமீபாக்களும் இருந்தன. ஆனால் அந்த கூட்டுயிர் அதிகமான
ஆக்சிஜனை சுவாசிக்கிறது என்று கருவிகள் கூறின
“குமிழிக்குள்
இருக்கும் அமீபாக்களின் அளவுக்கே இவையும் ஆக்ஸிஜனை சுவாசிக்கின்றன” என்று குரு சொன்னது
“அப்படியென்றால்
அங்கே வெளியே ஆக்ஸிஜன் நிறைய இருக்கிறது!” என்று நாமி கூவினாள்
“இருக்க வாய்ப்பிருக்கிறது”
என்றது குரு.
“நம் கருவிகள்
என்ன காட்டுகின்றன?”என்று நாமி கேட்டாள்
“நாம் இதுவரை அதை
அளந்தே பார்க்கவில்லை” என்று குரு சொன்னது.
குரு தகவல்களை
காட்டியது. கண்ணாடிக்குமிழிக்கு வெளியே உள்ளே இருக்குமளவுக்கே ஆக்சிஜன் இருந்தது.
“இந்த கோளில் ஆக்சிஜன்
குறைவாகவே இருந்தது. இந்த ஆக்சிஜன் எப்படி உருவாகியிருக்கும்?”என்று நாமி வியந்தாள்
“முன்பு இங்கே
நடந்த கதிரியக்கத்தில் இங்குள்ள வேதியியல் அமைப்பில் ஏதாவது மாற்றம் வந்திருக்கலாம்”என்று
குரு சொன்னது.
“என்ன மாற்றம்?”
என்று நாமி கேட்டாள்
“இருக்கும் செய்திகளை
தொகுத்து நூறு வாய்ப்புகளை காட்டுகிறேன்”என்று குரு சொன்னது
சற்று நேரத்தில்
அது நூறு வாய்ப்புகளைச் சுட்டிக்காட்டியது. நாமி அதில் ஒன்றை தேர்வு செய்தாள். அதுவே
சரியாக இருக்குமென அவள் நினைத்தாள்
வெளியே தரை கந்தகத்தால்
ஆனது. கதிரியக்கத்தின் சூட்டில் அது நைட்ரஜனுடன் வேதிவினை புரிந்தது. காற்றிலிருந்த
நைட்ரஜனை கந்தகம் இழுத்துக்கொண்டது. சல்ஃபர் நைட்ரேட்டுகள் உருவாகின. அவை மண்ணில் படிந்தன.
அதன் விளைவாக காற்றிலிருந்த
நைட்ரஜன் மிகவும் குறைந்தது. ஆக்ஸிஜன் கூடுதலாகியது. தங்கத்துளியின் காற்றுமண்டலம்
மாறியது
காற்றில் ஆக்ஸிஜன்
கூடுதலானதும் ஏற்கனவே மண்ணில் இருந்த பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகின. அவை கார்பன்டையாக்சைடை
உட்கொண்டு ஸ்டார்ச்சை உருவாக்கின.செடிகளைப்போல அவை ஆக்ஸிஜனை வெளிவிட்டன.
விளைவாக காற்றுமண்டலத்தில்
ஆக்ஸிஜன் பெருகத் தொடங்கியது. ஆக்ஸிஜனை உண்டு பாக்டீரியாக்களும் மேலும் பெருகின.
“வெளியே உள்ள மண்ணின்
மேற்பரப்பில் பாக்டீரியாக்கள் பெருகிக்கிடக்கின்றன. மண்ணின் எடையில் ஐந்தில் ஒருபகுதி
பாக்டீரியாக்கள்தான்”என்று குரு சொன்னது.
நாமி அந்தச் சிற்றுயிரை கூர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தாள். அவளுக்கு அதைப் பார்க்கப்பார்க்க ஆச்சரியமாக இருந்தது. சிற்றுயிர்கள் இணைந்து ஒன்றாகி ஒரே உடலாகிவிட்டன.
“இவற்றின் மனம்
என்பது என்ன? அது தனித்தனியாக இருக்குமா, ஒன்றாக இருக்குமா?” என்று நாமி கேட்டாள்
“இப்போது அவற்றுக்கு
மனம் என்ற ஒன்று இல்லை. கூட்டாக அவை செயல்படுவதுகூட திட்டமிட்ட செயல் அல்ல. நீர் வழிந்து
ஓடுவதுபோலத்தான் அவை செல்கின்றன” என்று குரு சொன்னது
“அவை எப்படி இணைகின்றன?”என்று
நாமி கேட்டாள்
“ஒன்று இன்னொன்றுடன்
இணைந்ததும் நகர்வது எளிதாக இருக்கிறது. ஆகவே இணைகிறது. நகர்வது கடினமாக ஆனால் பிரிந்துவிடுகிறது”
என்று குரு சொன்னது
“எறும்புகள் ஒரே
கூட்டமாகச் செயல்படுவதுபோலத்தான் இவையும் செயல்படுகின்றனவா?”என்றாள் நாமி
‘ஆமாம்.ஒவ்வொரு
எறும்புக்கும் தனித்தனியாக எண்ணம் உள்ளது. ஆனால் ஒன்றாகச் சேர்ந்தால் அவை ஒரே எண்ணமாக
மாறிவிடுகின்றன”
அமீபாக்கள் இணைந்து
இணைந்து ஒரு பந்து போல ஆயின. அந்த பந்து உருண்டு போக ஆரம்பித்தது.
“ஆக்ஸிஜன் பெரிகியபோது
அமீபாக்களும் பெருகின. அவை இப்படி ஒன்றாக திரண்டன”என்று குரு சொன்னது
“ஏன் இந்த இந்த
அமீபாக்கள் இப்படி ஒன்றாகத் திரள்கின்றன?” என்று நாமி கேட்டாள்
“நான் நூறு வாய்ப்புகளை
எடுத்து தருகிறேன்” என்று குரு சொன்னது.
அந்த கேள்விக்கு
விடையாக தன் தகவல்களில் இருந்து நூறு வாய்ப்புகளை எடுத்து அளித்தது குரு. நாமி அதில்
பொருத்தமானதை தேர்வுசெய்தாள்.
இந்த அமீபாக்கள்
ஏற்கனவே இங்கே இருந்தபோது பாக்டீரியாக்களைத்தான் உணவாக உண்டன. பாக்டீரியாக்கள் பெருகியபோது
அமீபாக்களும் பெருகின என்று நாமி புரிந்துகொண்டாள்.
பாக்டீரியாக்கள்
மாவுச்சத்தை உண்டுபண்ணிக் கொண்டன. அதை அமீபாக்கள் சாப்பிட்டன. மாவுச்சத்தை செரித்துக்கொள்ள
கூடுதல் ஆக்ஸிஜன் தேவைப்பட்டது.
ஆகவே ஆக்ஸிஜனை
கூடுதலாக எடுத்துக்கொள்ளும்படி அமீபாக்களின் உடலமைப்பு மாறியது. அமீபாக்கள் விரைவாக
பெருகின.
ஏற்கனவே அமீபாக்கள்
தங்கள் உணவாகிய பாக்டீரியாவிலேயே இருந்தன. பாக்டீரியாக்கள் குறைந்ததும் உணவுக்காக அமீபாக்கள்
நகரவேண்டியிருந்தது. நகர்வதற்கான சிறந்த வழி பல அமீபாக்கள் ஒன்றாக இணைவதுதான் என்று
அவை கண்டுபிடித்தன.
நாமி தன் முன்னால்
இருந்த ஆய்வுக்கருவியில் அமீபாக்கள் உருண்டு செல்வதைக் கண்டாள். அந்த உருண்டையின் அருகே
ஒரு சிறிய குழி இருந்தது. அமீபாக்கள் அந்தக் குழியில் விழுந்தன. அந்தக் குழியை நிரப்பின.
அதன்பின் அந்தக்குழியின் வடிவத்தை அடைந்தன. அந்தவடிவம் நகர்ந்து சென்றது.
வெளியே என்ன நடைபெறுகிறது
என்று நாமி புரிந்துகொண்டாள். “அமீபாக்கள் தங்களுக்கு சொந்தமாக வடிவம் இல்லாமல் இருக்கின்றன.
எந்த வடிவத்தை அளித்தாலும் அந்த வடிவத்தை அவை ஏற்றுக்கொள்கின்றன” என்று அவள் சொன்னாள்
‘அவை வடிவத்துக்காகத்
தவித்துக் கொண்டிருக்கின்றன” என்று குரு சொன்னது
நாமி கண்ணாடிக்குமிழிக்கு
வெளியே பார்த்தாள். அவளுடைய பாதங்களின் வடிவில் அமீபாக்களால் ஆன சிறிய உடல்கள் நகர்ந்துகொண்டிருந்தன்
“உன் விரல்கள்
அவற்றை விரைவாக நகரச் செய்கின்றன. ஆகவே அவை நிறைய பாக்டீரியாக்களை உண்ணமுடியும். இனி
அந்த வடிவத்தை அவை விட்டுவிட வாய்ப்பில்லை”என்று குரு சொன்னது
நாமிக்கு ஒரு சந்தேகம்
வந்தது. “நான் இவை எப்படி உருவாகியிருக்கும் என்று உங்களிடம் கேட்டேன். நீங்கள் எனக்கு
விடைக்கான நூறு வாய்ப்புகளை தந்தீர்கள். நான் அவற்றில் பொருத்தமான ஒன்றை தேர்வு செய்தேன்.
அந்த விடைகளைக் கொண்டு இவற்றையெல்லாம் புரிந்துகொண்டிருக்கிறேன்” என்றாள்
“ஆமாம், அதைத்தான்
மனிதர்கள் செய்யமுடியும்”என்றது குரு
“நான் தேர்வுசெய்யாத
மற்ற வாய்ப்புகளும் சரியாக இருக்கும் அல்லவா?”என்றாள் நாமி
“ஆமாம், அவற்றிலும்
சரியான விடைகள் இருக்க வாய்ப்புண்டு”என்றது குரு
“இன்னமும் சரியான
விடைகள் இருக்க வாய்ப்புண்டா?” என்று நாமி கேட்டாள்
“ஆமாம், இன்னும்
சரியான விடைகளும் இருக்கலாம்”என்றது குரு
“நான் இப்போது
புரிந்து வைத்திருக்கும் இந்த செய்திகள் எல்லாம் உண்மைதானா?” என்று நாமி கேட்டாள்
‘உண்மைதான்” என்றது
குரு
நாமி “அப்படியென்றால்
நான் வேண்டாம் என்று தவிர்த்துவிட்டவை பொய்தானே?”
“இல்லை அவையும்
உண்மையாக இருக்கலாம்” என்று குரு சொன்னது
நாமி குழப்பமாக
அமர்ந்திருந்தாள்
குரு சொன்னது.
“இதோபார், ஒன்று உண்மை என்றால் மற்றொன்று பொய் ஆக இருக்கவேண்டும் என்று சொல்லமுடியாது.
அது இன்னொருவகை உண்மை என்றுதான் சொல்லவேண்டும். இது உனக்கு தெரிந்த உண்மை.நீ தவிர்த்தவை
உனக்கு தெரியாத உண்மைகள். அவ்வளவுதான்”
“நான் இப்போது
இந்த கோளில் தெரியும் வாழ்க்கையை ஒரு கோணத்தில் புரிந்துகொண்டிருக்கிறேன். உயிர்கள்
தோன்றியதை விளக்கிக்கொண்டிருக்கிறேன். முற்றிலும் வேறொரு விளக்கம் இருக்குமா?”என்றாள்
நாமி
“அவ்வாறு ஆயிரக்கணக்கான
விளக்கம் இருக்கமுடியும். நீ அறிந்தது உண்மையின் ஒரு பக்கம் மட்டுமே” என்றது குரு.
“இந்த உயிர்கள்
உருவானதும் மாறியதும் வேறு காரணங்களால்தான் என்று சொல்லமுடியுமா?” என்றாள் நாமி
“ஆமாம், மொத்தமாகவே
வேறுகாரணங்களால்தான் என்று நீயேகூட பிறகு கண்டுபிடிக்கலாம்”என்று குரு சொன்னது
நாமி பெருமூச்சுவிட்டாள்
“உண்மை முடிவே
இல்லாதது. அவை அனைத்தையும் நாம் அறியமுடியாது. நமக்கு தெரிந்த உண்மை நமக்கு பயனுள்ளதா
என்பதுதான் முக்கியமானது. அதை நம்புவோம்’ என்றது குரு
“ஆமாம், அதுதான்
ஒரே வழி”என்றாள் நாமி
“ஆனால் நாம் அறிந்தது
மட்டுமே உண்மை என்று நாம் நினைக்காமலிருக்கவேண்டும். இந்த உண்மை நாம் உருவாக்கிக் கொண்டதுதான்.
இதைப்போல ஏராளமான உண்மைகள் இருக்கலாம். அதை நாம் உணர்ந்திருக்கவேண்டும்”என்று குரு
சொன்னது
”ஆமாம், அதை நன்கு
உணர்கிறேன்”என்றாள் நாமி
Comments
Post a Comment