உடையாள்-8
நாமி மீண்டும்
வெளியே வந்தபோது காலை விடிய ஆரம்பித்திருந்தது. மெல்லிய வெளிச்சம் மண்மேல் பரவியிருந்தது.
தெற்கே வானத்தின் விளிம்பு ஒரு ஒளிரும் கோடுபோல வளைந்து தெரிந்தது. வானில் விண்கற்கள்
மின்னியபடி பறந்துசென்றன. அவ்வப்போது சில கற்கள் மின்மினி போல தொலைவில் விழுந்தன
அவள் மங்கலான வெளிச்சத்தில்
நடந்து சென்றாள். அப்போது தொலைவில் எவரோ நடந்துசெல்வதைக் கண்டாள். அவளுடைய அதே அளவுகள்
கொண்ட உருவம். அவள் அதைநோக்கி சென்றாள். அந்த உருவம் பாறைகளின் மேல் தொற்றி ஏறிக்கொண்டிருந்தது
அவள் பாறைகளை அணுகியபோது
பாறைகளின்மேல் அதேவடிவில் நாலைந்து உருவங்கள் இருப்பதைக் கண்டு வியந்து நின்றுவிட்டாள்.
எல்லா உருவங்களும் ஒன்றுபோலவே தோன்றின. அவை அனைத்தும் பாறைகளின்மேல் ஏறிக்கொண்டிருந்தன
அவள் அவை என்ன
செய்கின்றன என்று கூர்ந்து பார்த்தாள். அவை பாறைகளில் ஏறிச் சென்றன. பாறைகளின் சரிவுகளில்
உடலை ஒட்டிக்கொண்டன. அவற்றின் உடல் எறும்புக்கூட்டம் கலைவதுபோல கலைந்தது. அவற்றின்
வடிவம் சிதைந்தது. பிறகு அவை மீண்டும் உருவம் அடைந்தன
அவள் மேலும் அருகே
சென்றாள். அப்போது தெற்குவானில் மஞ்சள்குள்ளனின் விளிம்பு தோன்றியது. எங்கும் வெளிச்சம்
பரவியது. அந்த வெளிச்சத்தில் கந்தகப்பாறைகளின் விளிம்புகள் பொன்னிறமாக மின்னின.
அந்தப்பாறைகளின்
விளிம்புகளில் சிறிய புடைப்புகள் இருந்தன. கற்கள் நீட்டிக்கொண்டிருப்பதுபோல. அல்லது
சேற்றை அப்பி வைத்ததுபோல அவை தோற்றமளித்தன.
அந்தப்புடைப்புகளின்மேல்தான்
அமீபாவால் ஆன அந்த உருவங்கள் ஒட்டிக்கொண்டன. அமீபாக்கள் கலைந்து அந்த புடைப்புக்களை
உள்ளே இழுத்துக்கொண்டன.அதன்பின் அவை உருவம் மீண்டு எழுந்துகொண்டன
அவள் அருகே சென்று
அந்த புடைப்புக்களைப் பார்த்தாள். அவை கல்போல பார்வைக்கு தோன்றின..ஆனால் காலால் தட்டியதும்
உடைந்து உதிர்ந்தன. அவள் அந்த பொடியை தொட்டு நாக்கில் வைத்தாள். அவை மெல்லிய இனிப்புடன்
இருந்தன.
அவை பாக்டீரியாக்கள்
என்று அவள் புரிந்துகொண்டாள். பாக்டீரியாக்கள் உருவாக்கிய மாவுச்சத்துதான் அந்த இனிப்பு.
அதைத்தான் அந்த உருவங்கள் உடலுக்குள் இழுத்துக்கொண்டன.
அவை சாப்பிடும்
வழிமுறை அது.ஏனென்றால் அவற்றுக்கு வாயோ வயிறோ இல்லை. கண்ணோ மூக்கோ இல்லை. அவை ஒன்றாகத்
திரண்ட அமீபாக்களின் குவியல் மட்டும்தான். கல்லை வைத்து கட்டிடம் எழுப்புவதுபோல அமீபாக்கள்
ஒரே உடலாக ஆகியிருந்தன
அவை எப்படி அவ்வளவு
பெருகின என்று நாமி யோசித்துப் பார்த்தாள். அவள் முன்பு புழுதியில் படுத்து தன் அச்சு
வடிவத்தை பதித்த இடத்துக்குச் சென்றாள். அங்கே அவள் முந்தைய நாள் உருவாக்கிய அந்த அச்சுவடிவம்
அப்படியே இருந்தது
அது ஒரு பாறையின்
மறைவுப்பகுதி. அங்கே காற்று நேரடியாக வீசவில்லை. ஆகவேதான் அங்கே அவ்வளவு புழுதி குவிந்திருந்தது.
நிறைய புழுதி இருந்தமையால்தான் அவளால் அங்கே நன்றாகப் புதைய முடிந்தது.
ஆனால் அங்கே காற்றே
இல்லாமலிருந்தமையால் அந்த அச்சுவடிவமான பள்ளம் கலையவே இல்லை. அதில் அமீபாக்கள் நிறைந்து
புதிய உருவங்கள் எழுந்து வந்துகொண்டே இருந்தன.
அவள் பார்த்துக்கொண்டே
நின்றாள். அங்கிருந்து நாமியின் தோற்றத்திலேயே புதிய உருவங்கள் எழுந்து சென்றபடியே
இருந்தன. எல்லாமே ஒரே முகம் கொண்டவை. ஒன்றைப்போலவே இன்னொன்று இருந்தன.
அதை கலைத்தாலென்ன
என்று நாமி நினைத்தாள். இல்லாவிட்டால் அதிலிருந்து இன்னும் ஏராளமான உருவங்கள் தோன்றிவிடும்.
தங்கத்துளி என்ற இந்த கோளின் பரப்பு முழுக்க உருவங்களால் நிறைந்துவிடும்
ஆனால் அவள் அதை
கலைக்கப்போனபோது இன்னொரு எண்ணம் வந்தது. அதைக் கலைப்பதில் அர்த்தமே இல்லை. ஏனென்றால்
ஏற்கனவே உருவான வடிவங்கள் ஏராளமாக இருந்தன. அவற்றை அவளால் கட்டுப்படுத்தவே முடியாது
அவை இதேபோல மேலும்
அச்சுக்களை வேறு இடங்களில் உருவாக்கியிருக்கும். அங்கிருந்தும் இதே போன்ற வடிவங்கள்
வந்துகொண்டிருக்கும். அவை அனைத்தையும் கண்டுபிடித்து அழிக்க அவளால் முடியாது
நாமிக்கு ஒன்று
புரிந்தது, அவள் ஒரு பெரிய செயல்பாட்டை தொடங்கிவைத்து
விட்டாள். இனி அதை அவளால் நிறுத்த முடியாது. அது தன்னைத்தானே வளர்த்துக்கொண்டே செல்லும்.
பெருகிக்கொண்டே இருக்கும்.
இயற்கையில் எல்லாமே
அப்படித்தான். ஒன்று தொடங்கிவிட்டால் அது தானாகவே வளர்ந்து செல்லும். அதை தொடங்கியவர்
நினைத்தாலும் நிறுத்திவிடமுடியாது
அப்படியென்றால்
என்ன ஆகும்? இந்த கோள் முழுக்க இதே வடிவங்கள் பெருகிக்கொண்டே இருக்குமா? அதனால் என்ன
விளைவு உருவாகும்?
நாமி திரும்பி
கண்ணாடிக்குமிழிக்குள் ஓடினாள். கண்ணாடிக்குமிழிக்குள் சென்று அமர்ந்துகொண்டு கணிப்பொறியை
இயக்கினாள். குரு தோன்றினார். அவர் அப்போது டார்வினின் முகத்துடன் இருந்தார்
“வெளியே அந்த உருவங்கள்
பெருகிக்கொண்டே இருக்கின்றன. அவை இன்னும் பெருகிக்கொண்டே இருக்கும் என்று தோன்றுகிறது”
என்று நாமி சொன்னாள்
“ஆமாம், அவை ஏராளமாக
இருக்கின்றன. ஒரே அச்சிலிருந்து ஒரே இரவில் இந்த அளவுக்கு அவை பெருகியிருக்கமுடியாது”என்றது
குரு
“அவை எங்காவது
படுக்கின்றனவா?”என்று நாமி கேட்டாள்
“ஆமாம். அவை மனித
உடலை அடைந்துவிட்டன. ஆகவே அவற்றுக்கு மனித உடலுக்கான ஓய்வும் தேவையாகிறது. அவை ஏராளமான
உணவை தேடி உண்கின்றன. அந்த உணவை அவை செரித்தாகவேண்டும்.அதன்பின் அவை படுத்து ஓய்வெடுக்கின்றன”
என்றது குரு.
“ஏன் அவை புழுதியிலே
படுத்த பள்ளங்கள் அப்படியே இருக்கின்றன?” –
“அவை காற்றுவீசும்
இடத்தில் படுப்பதில்லை. ஏனென்றால் காற்று அவற்றின் வடிவத்தை கலைக்கிறது. அமீபாக்கள்
ஒன்றையொன்று இறுகக் கவ்விக்கொண்டு அந்த வடிவத்தை பாதுகாக்க வேண்டியிருக்கிறது. அதற்கு
நிறைய ஆற்றல் தேவையாகிறது. ஆகவே அவை காற்றில்லாத இடங்களில் படுக்கின்றன” என்று குரு
சொன்னது
“புரிகிறது.அங்கே
அந்த வடிவம் பதிந்துவிடுகிறது. அந்த அச்சுவடிவில் மற்ற அமீபாக்கள் சேர்ந்து புதிய உடல்கள்
உருவாகின்றன” என்று நாமி சொன்னாள்.
“ஆமாம் இப்போது
இந்த கோளில் இருநூற்றி பதினேழு உருவங்கள் உள்ளன. அவை பெருகிக்கொண்டே இருக்கின்றன. நாளை
காலைக்குள் பல ஆயிரம் உடல்கள் உருவாகிவிடும். அவை பல லட்சமாக ஆகும்”
நாமி “ஆமாம், இனி
நான் அதை தடுக்கமுடியாது”என்று சொன்னாள்
அவள் வெளியே பார்த்துக்கொண்டே
இருந்தாள். அங்கே அவளைப்போன்ற உருவங்கள் புழுதியில் நடந்துகொண்டிருந்தன. பாறைகளில்
ஏறிக்கொண்டிருந்தன.
“எண்ணிக்கை கூடிக்கொண்டே
இருக்கிறது”என்று குரு சொன்னது
நாமி அன்று முழுக்க
சிந்தனையில் ஆழ்ந்து அமர்ந்திருந்தாள். எழுந்து சென்று கண்ணாடிக் குமிழிக்கு வெளியே
பார்த்தாள். நல்ல வெயில் வந்திருந்தது.
அவளால் பல உருவங்கள்
அங்குமிங்கும் அலைவதை காணமுடிந்தது. அவற்றின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருந்தது.
“இந்த கோள் மிகப்பெரியது.
இங்கே இவை பெருக இடமிருக்கிறது”என்று குரு சொன்னது
“ஆனால் அவற்றுக்கான
உணவு எங்கே இருக்கிறது?” என்று நாமி கேட்டாள்.
“இங்கே பாக்டீரியாக்களும்
பெருகிக்கொண்டே இருக்கின்றன” என்று குரு சொன்னது
“ஆனால் இந்த உருவங்கள்
பெருகும் அளவுக்கு பாக்டீரியாக்கள் பெருகுவதில்லையே” என்று நாமி சொன்னாள்
“உண்மைதான்...
உணவுக்காக இவை போட்டிபோடவேண்டியிருக்கும். இயற்கையாக உருவாகும் உணவு இவற்றுக்கு போதாது.உணவை
உண்டுபண்ணியே ஆகவேண்டும்” என்றது குரு.
“பாக்டீரியாக்களை
எப்படி உண்டுபண்ணுவது?”என்று நாமி கேட்டாள்
“பாக்டீரியாக்களுக்கு
நைட்ரஜனும் கார்பன்டையாக்சைடும் சூரிய ஒளியும்
தேவை. நிறைய நைட்ரஜனும் கார்பன்டையாக்சைடும் சூரியஒளியும் கிடைக்கும்படி அவற்றை மாற்றினால்
அவை பெருகும்”என்றது குரு
“இப்போது அவை பெரும்பாலும்
மண்ணோடு மண்ணாக கிடக்கின்றன. ஆனால் பாறைவிளிம்புகளில் மட்டும் பெரிய கொத்துகளாக புடைத்திருக்கின்றன”
என்று –
“ஆமாம். அவை காற்றில்
பறந்து வந்து பாறைமேல் ஒட்டிக்கொள்கின்றன. அங்கே சூரியவெளிச்சமும் கார்பன்டையாக்சைடும்
நைட்ரஜனும் நிறையவே கிடைக்கிறது. ஆகவே அங்கே பெரிதாக வளர்கின்றன. அப்படித்தான் அந்த
புடைப்புகள் உருவாகின்றன”என்று குரு சொன்னது
“பாறைகளில் நிறைய
பாக்டீரியாக்களை ஒட்டிவைக்கலாமா? அவற்றை வளரச்செய்யலாம்” என்று நாமி சொன்னாள்
“அதைவிடச் சிறந்த
வழி உண்டு. பாக்டீரியாக்களும் தானாகவே பெருகுவதற்கு உரிய வடிவத்தை கண்டுபிடிப்பதுதான்
அது” என்று குரு சொன்னது
“அந்த வடிவம் எது?”என்று
நாமி சொன்னாள்
“தேடிக் கண்டுபிடித்து
தருகிறேன்” என்று குரு சொன்னது
குரு தேடிக் கண்டடைந்தது.
“மிக அதிகமாக நைட்ரஜன்,கார்பன் டையாக்சைட் சூரியவெளிச்சம் ஆகியவை கிடைக்கும் வடிவம்
இதுதான்”என்று காட்டியது
அது செடிகள், மரங்களின்
வடிவம்.
நாமி குரு காட்டிய
வடிவங்களைக் கண்டு வியப்புடன் “மரங்களா!”என்றாள்
“ஆமாம். பூமியில்
பல லட்சம் ஆண்டுகளாக பரிணாமம் அடைந்து வந்த வடிவம் இது. மிகச்சிறந்த வடிவம்தான் நீடிக்கும்.
மற்றவை அழிந்துவிடும். மரத்தின் இலைகள் மிக அதிகமாக சூரிய ஒளியை பெறும்படி வடிவம் கொண்டவை.
மரத்தின் இலைகளில் காற்று மிக அதிகமாகப் படும்” என்றது குரு
“ஆனால் மரங்களும்
செடிகளும் வெளியே வளர்வதற்கு வாய்ப்பில்லை. வெளியே ஆக்ஸிஜனும் கார்பன்டையாக்சைடும்
இருக்கின்றன. சூரிய ஒளி இருக்கிறது. ஆனால் தண்ணீரே இல்லை” என்று நாமி சொன்னாள்
“ஆமாம், வெளியே
தண்ணீர் இல்லை”என்று குரு சொன்னது
“அப்படிச் சொன்னால்
எப்படி? வெளியே செடிகள் வளர்வதற்கு என்ன வழி? சிறந்த விடைகளை தேர்வுசெய்து கொடு”என்று
நாமி சொன்னாள்
குரு பத்து வழிகளை
தேர்வுசெய்து கொடுத்தது. அதில் முதல்வழி ஒத்துயிர் முறை. ஓர் உயிர் இன்னொரு உயிரை சார்ந்து
வாழ்வது அது. இரண்டு உயிர்களும் தனித்தனியாக வாழமுடியாது.
பூமியில் வைரஸ்
போன்ற நுண்ணுயிர்கள் எல்லாமே இன்னொரு உயிரை நம்பித்தான் வாழ்ந்தன. பேன் போன்ற நுண்ணிய
பூச்சிகள்கூட அப்படித்தான் வாழ்ந்தன.
பாக்டீரியாக்களேகூட
பூமியில் பெரும்பாலும் வேறொரு உடலுக்குள்தான் வாழ்ந்தன. செடிகளிலோ விலங்குகளிலோ புகுந்து
அந்த உடலின் பகுதியாகவே அவை திகழ்ந்தன.மனித உடலிலேயே பலநூறு வகையான பாக்டீரியாக்கள்
வாழ்ந்தன
“செடிக்கு தேவையான
உணவை பாக்டீரியாக்கள் அளிக்கட்டும். பாக்டீரியாவுக்கு தேவையான வடிவத்தை செடிகள் அளிக்கட்டும்.
அவை சேர்ந்து வாழமுடியும். அவை சேர்ந்தே பெருகவும் முடியும்.இரண்டுக்குமே அந்த முறை
நன்மையானது என்பதனால் அது நீடிக்கும்”என்று குரு சொன்னது
ஆனால் நாமிக்கு
சந்தேகமாக இருந்தது. அதை நான் செய்யலாமா என்று அவள் யோசித்தாள்.
அப்போது வியாசரின்
வடிவில் குரு கணிப்பொறியில் தோன்றியது.
“ஏன் கவலைப்படுகிறாய்?”என்று
குரு கேட்டது.
“இதை நான் செய்யலாமா?”என்று
நாமி கேட்டாள்
“உன் மனம் என்ன
சொல்கிறது?”என்றது குரு
“இதை நான் தொடங்கிவைத்துவிட்டேன்.
இனி இதை நிறுத்தமுடியாது.ஆகவே இது சிறப்பாக நடக்கட்டும் என்றுதான் நினைக்க முடியும்”
என்று நாமி சொன்னாள்
“இதனால் உனக்கு
ஏதாவது சொந்த நன்மை உண்டா?”என்று குரு கேட்டது
“இல்லை”என்று நாமி
சொன்னாள்
“இதைச்செய்தால்
நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா?”என்று குரு சொன்னது
“ஆமாம்”என்று நாமி
சொன்னாள்
“அப்படியென்றால்
இதை நீ செய்யலாம்” என்று குரு சொன்னது
நாமி முகம் மலர்ந்தாள்.
அவள் சிரித்துக்கொண்டே “இதை நான் செய்கிறேன்”என்றாள்
அதன்பின் அவள்
அந்த கண்ணாடிக்குமிழுக்குள் இருந்த வெவ்வேறு வடிவிலான ஐம்பது சிறிய செடிகளை வேருடன்
பிடுங்கிக் கொண்டாள். அவற்றுக்கு தேவையான தண்ணீரையும் எடுத்துக்கொண்டாள்.
அவற்றுடன் அவள்
கண்ணாடிக்குமிழிக்கு வெளியே சென்றாள். அந்தச் செடிகளை புழுதி மண்ணில் இடைவெளி விட்டு
நட்டாள். அவற்றின் அடியில் கொஞ்சம் தண்ணீர்விட்டாள்.
அதன்பின் அவள்
திரும்பி வந்தாள். குமிழிக்குள் அமர்ந்து வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். அவற்றில்
எந்தச் செடி வெளியே வளரும் என்று அவளுக்கு குழப்பமாக இருந்தது. ஏதாவது ஒரு செடி வளர்ந்தால்கூட
நல்லது என்று நினைத்தாள்.
இரவு ஆகியது. அந்தச்
செடிகள் என்ன ஆகும் என்று அவள் நினைத்துக்கொண்டே இருந்தாள்.
கணிப்பொறியில்
குரு தோன்றினார். அவர் டார்வினின் வடிவில் இருந்தார்
“அங்கே வெளியே
என்ன நடக்கிறது?” என்று நாமி சொன்னாள்
“அந்தச் செடிகளின்
இலைகளில் காற்று மிகுதியாகப் படுகிறது. அங்கே நைட்ரஜனும் கார்பன்டையாக்சைடும் அதிகமாக
கிடைக்கிறது. ஆகவே மண்ணிலிருந்து பாக்டீரியாக்கள் அதன்மேல் ஏறித் தொற்றிக்கொள்கின்றன”என்று
குரு சொன்னது
நாமி அதை எண்ணியபடியே
தூங்கிவிட்டாள். மறுநாள் காலையில் எழுந்ததுமே அவளுக்குச் செடிகளின் நினைவுதான் வந்தது
கணிப்பொறியில்
குருவை அழைத்தாள். “செடிகள் எந்த நிலையில் இருக்கின்றன?”என்று கேட்டாள்
“எல்லா செடிகள்மீதும்
பாக்டீரியாக்கள் படிந்துவிட்டன. பாக்டீரியாவின் உடலில் இருந்து ஸ்டார்ச்சை செடி எடுத்துக்கொள்கிறது.ஒத்துயிர்
முறை சிறப்பாக அமைந்துள்ளது” என்று குரு சொன்னது
“அவை வளர முடியுமா?”என்று
நாமி சொன்னாள்
“அவை கொஞ்சம் வளர்ந்துவிட்டன.வேகமாக
வளர்கின்றன”என்று குரு சொன்னது
‘ஏன்?”என்று நாமி
சொன்னாள்
“ஏனென்றால் வெளியே
மண்ணின் ஈர்ப்புவிசை குறைவு. ஆகவே அவை வேகமாக வளர்கின்றன. தேவையான உணவை பாக்டீரியாக்கள்
அவற்றுக்கு அளிக்கின்றன”
நாமி வெளியே ஓடினாள்.
வெளியே அவள் முந்தையநாள் நட்டுவைத்த சிறிய செடிகளெல்லாம் இடுப்பளவுக்கு வளர்ந்திருந்தன.
அவை மஞ்சள்நிறமான புழுதியாலானவை போல தோன்றின
அவள் குனிந்து
அந்தச் செடிகளை கூர்ந்து பார்த்தாள். செடிகள் முழுக்க பாக்டீரியாக்கள் ஒட்டி மூடியிருந்தன.
அவை வெயிலில் மின்னிக்கொண்டிருந்தன.
அந்த பாக்டீரியாக்கள்
வெயிலில் இருந்து உணவை உருவாக்கிக் கொண்டன. அவற்றை செடி தன் இலைகள் வழியாக வாங்கிக்கொண்டது.
செடி வளர்ந்தபோது பாக்டீரியாக்களுக்கு மேலும் இடம் கிடைத்தது.
தரையில் ஒரு செடி
நிற்கும் இடத்தில் எவ்வளவு பாக்டீரியாக்கள் இருக்கமுடியுமோ அதைவிட ஆயிரம் மடங்கு பாக்டீரியாக்கள்
அந்தச் செடியில் இருக்கமுடிந்தது.
நாமி ஒவ்வொரு செடியாக
பார்த்துக்கொண்டு நடந்தாள். இனிமேல் அந்தச் செடிகளுக்கு நீர்விடவேண்டியதில்லை. பூமியிலுள்ள
செடிகள் நீரை வைத்துத்தான் ஸ்டார்ச் தயாரித்தன. ஆகவே அவற்றுக்கு நீர் அவசியத்தேவை.
அவள் வெளியே நட்ட செடிகள் பாக்டீரியாவிலிருந்தே ஸ்டார்ச்சை எடுத்துக்கொண்டன. ஆகவே அவற்றுக்கு
நீர் தேவையில்லை
அந்த செடிகள் சீக்கிரமே
மரங்களாக வளரும் என அவள் அறிந்தாள். அவற்றில் பாக்டீரியாக்கள் கொத்துக்கொத்தாக பெருகும்.
அவற்றை அங்கே அலையும் உருவங்கள் உண்ணமுடியும்.
நாமி அன்று பகல்
முழுக்க மேலும் நிறைய செடிகளை கொண்டுசென்று நட்டாள். பாக்டீரியாக்கள் அந்தச் செடிகளை
வந்து பிடித்துக்கொண்டன. அப்படியே மூடிக்கொண்டன
அவள் மீண்டும்
தன் கண்ணாடிக் குமிழிக்குள் வந்தாள். குருவை கம்ப்யூட்டரில் வரவழைத்தாள்.
“குரு பாக்டீரியாக்கள்
எப்படி செடிகளை இப்படி பிடித்துக்கொள்கின்றன?”என்று நாமி சொன்னாள்
“அவற்றுக்கு மிகச்சிறந்த
வடிவம் செடியும் மரமும்தான்”என்று குரு சொன்னது
“ஆனால் இப்படி
ஒரு வழி இருப்பது அவற்றுக்கு எப்படி தெரிகிறது?”என்று நாமி சொன்னாள்
“நுண்ணுயிர்களுக்கு
தனித்தனியாக அறிவு என்பது இல்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரே அறிவு உண்டு. அதை கூட்டறிவு
என்று சொல்லலாம். அவற்றில் ஒன்றுக்கு தெரிந்தது எல்லாவற்றுக்கும் தெரிந்துவிடும்”என்று
குரு சொன்னது
“இது பூமியிலேயே
இப்படித்தான் இருந்ததா?”
‘ஆமாம், பூமியிருந்த
எல்லா பாக்டீரியாக்களுக்கும் வைரஸ்களுக்கும் அமீபாக்களுக்கும் கூட்டறிவு இருந்தது.
அவற்றில் ஒன்றுக்கு தெரிந்தது எல்லாவற்றுக்கும் தெரியும். அவை ஒட்டுமொத்தமாகவே செயல்பட்டன”
என்று குரு சொன்னது
நாமி கொஞ்சநேரம்
யோசித்தாள். அதன்பிறகு கேட்டாள். ‘குரு, இந்த பாக்டீரியாக்கள் அமீபாக்கள் எல்லாம் எப்படியாவது
வாழவேண்டும் என்று ஏன் நினைக்கின்றன?”
குருவின் முகம்
வியாசரின் முகமாக மாறியது. குரு சொன்னது. “அது ஒவ்வொரு உயிருக்குள்ளும் உள்ள ஆசை. வாழவேண்டும்,
பெருகவேண்டும் என்ற துடிப்பு அது. அதற்குப்பெயர் திருஷ்ணை”
நாமி கேட்டாள்.
“அந்த ஆசை எங்கிருந்து வருகிறது?”
குரு சொன்னது
“அந்த ஆசையின் அடிப்படை இந்தப் பிரபஞ்சத்திலேயே உள்ளது. இந்தப்பிரபஞ்சம் தோன்றி வளர்ந்துகொண்டே
இருக்கிறது. வாழவேண்டும் என்றும் வளரவேண்டும் என்றும் பிரபஞ்சம் நினைக்கிறது. ஆகவே
அதன் ஒவ்வொரு பகுதியிலும் அந்த ஆசை உள்ளது”
நாமி வெளியே பார்த்துக்கொண்டே
இருந்தாள். பாக்டீரியாக்கள் செடிகளின்மேல் ஒட்டிக்கொண்டன. அவற்றை மொத்தமாகவே மூடின.
“இந்த கோளமே வாழவேண்டும்
என்று துடிக்கிறது”என்று குரு சொன்னது
“ஆமாம், இங்கே
உயிர்பெருகவேண்டும் என்று அது ஆசைப்படுகிறது”என்று குரு சொன்னது
“இன்னும் சிலநாட்களில்
இங்கே காடுபோல மரங்கள் நிறைந்துவிடும்”என்று நாமி சொன்னாள்
“ஆமாம், காடுதான்
உயிர்கள் வளர மிக வசதியான அமைப்பு”என்று குரு சொன்னது. குரு டார்வினாக உருமாறியிருந்து.
“ஏன்?”என்று நாமி
சொன்னாள்
“ஏனென்றால் காடு
என்பது பலநூறு வகையான உயிர்கள் சேர்ந்து வாழும் அமைப்பு. ஓர் உயிரை இன்னொரு உயிர் ஆதரித்து
வளர்க்கிறது. ஒவ்வொன்றும் இன்னொன்றைச் சார்ந்து வளரும். ஆகவே இங்கே காடு உருவாகும்”
‘இந்த உருவங்களெல்லாம்
அங்கே வாழும் இல்லையா?”என்று நாமி சொன்னாள்
“ஆமாம். அவற்றுக்கான
உணவு அந்தக்காட்டில் இருக்கும்”என்று குரு சொன்னது
“அவற்றுக்குப்
பெயர் போடவேண்டும்”என்று நாமி சொன்னாள்
“நல்ல பெயர்களை
நான் சொல்கிறேன்”என்று குரு சொன்னது
குரு நிறைய பெயர்களைச்
சொல்லிக்கொண்டே சென்றது. “நீ மனிதப்பெண். இவர்கள் உன்வடிவில் இருக்கிறார்கள். ஆகவே
இவர்கள் மனித உருவம் கொண்டவர்கள். மனிதர்கள் என்று அழைக்கலாம்” என்றது
“வேண்டாம். இவர்கள்
மனிதர்கள் அல்ல. வேறுபெயர் சொல்லுங்கள்” என்றாள் நாமி
“சம்ஸ்கிருதத்தில்
தேவர்கள் என்ற பெயர் இருக்கிறது. பாரசீகத்தில் தேவோ. லத்தீனில் தியோ” என்று குரு சொன்னது
“அதற்கு என்ன பொருள்?”
என்று நாமி சொன்னாள்
“ஒளியாலானவர்கள்.
ஒளியை உண்பவர்கள் என்று பொருள்”என்று குரு சொன்னது
“அப்படியென்றால்
இவர்களை நாம் தியோ என்று அழைப்போம். தியோக்கள்”என்று நாமி சொன்னாள்
“ஆம், இனி இவர்கள்
தியோக்கள்”என்று குரு சொன்னது
[மேலும்]
Comments
Post a Comment